மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 800 தமிழக மருத்துவ மாணவர்கள், தங்களை தமிழகத்திற்கு அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இதுவரை தங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படவில்லை என்றும் கடிதத்தில் தெரிவித்தனர்.
மாணவர்கள் எழுதிய கடிதத்தில், "கிர்கிஸ்தான் தலைநகரமான பிஷ்கெக்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்றல் சர்வேதேச அளவில் பொது முடக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக 22 மார்ச் 2020 முதல் இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் இணைந்து 12 நாடுகளுக்கு மொத்தம் 64 விமானங்களை (ஏர் இந்தியா - 42 மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் - 24) இயக்குகின்றன. இருப்பினும், திட்டத்தின் மூன்றாவது கட்டத்திலும் பிஷ்கெக்- தமிழ்நாட்டிற்கு துரதிர்ஷ்டவசமாக விமானங்கள் இயக்கப்படவில்லை. நாங்கள் பிஷ்கெக்கில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். இருப்பினும், தூதரக அதிகாரி ஒருவர் எங்களை தமிழக முதல்வரை அணுகும்படி கேட்டுக் கொண்டார்.
நாங்கள், எண்ணற்ற இன்னல்களை சந்தித்து வருகிறோம், அதில சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறாம்.
1) இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை முடித்துவிட்டனர், அவர்களின் விசா சில வாரங்களில் காலாவதியாகிறது.
2) விடுதி மாணவர்களுக்கு உணவு சரியாக கிடைப்பதில்லை.
3) அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு மாத வாடகை செலுத்த போதுமான பணம் இல்லை.
4) தலைநகர் பிஷ்கெக் - ல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது .
5) தூதரக அதிகாரிகளுடன் பேசுவதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்படுகிறது
6) தூதரக அலுவகம் முன் தினமும் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், எங்களுக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
7) கடந்த இரண்டு மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களுக்காகக் காத்திருந்தோம்.ஆனால், திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் கூட எங்களுக்கான விமானங்கள் அறிவிக்கப்படாததை அறிந்து ஏமாற்றம் அடைந்தோம்.
8) எங்கள் மாணவர்களில் பலருக்கு மருத்துவ பிரச்சினைகள் உள்ளன, அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் சிகிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கைகளை எப்போது தீர்க்கப்படும் என்று பதிலளித்தல், குறைந்தபட்ச நம்பிக்கையாவது ஏற்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம்" என்று கடிதத்தில் தெரிவித்தனர்.
சிறப்பு விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.
இநிலையில், சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களை தொடர்பு கொண்டதாகவும், முதல்வரின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாக அமைச்சர் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.