டிராபிக் ராமசாமி மீது செருப்பை வீசிய அதிமுக பெண் : வேடிக்கை பார்த்த காவல் துறையினர்!

தடையை மீறி மெரினாவில் அதிமுகவினர் பேனர் வைத்ததால்  போராட்டத்தில் ஈடுப்பட்ட டிராபிக் ராமசாமி மீது அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை வீசும் வீடியோ  பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம்,  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  சமாதியில், மணிமண்டபம் கட்டுவதற்கான  அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க  அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் வரும் வழியெல்லாம் அதிமுகவினர் கட்டு அவுட் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பேனரை அகற்றக்கோரி திடீரென்று போராட்டத்தில் ஈடுப்பட்டார்  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்றில் மேலே ஏறி, உடனடியாக பேனரை அகற்றக் கோரியும்   போலீசாரிடம் வாதிட்டார்.

அப்போது, அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் டிராபிக் ராமசாமிக்கு  எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.  அதிலும் சிலர்,  அவர் மீது தாக்குதலிலும் ஈடுப்பட்டனர்.   கூட்டத்தில் இருந்த சிலர் ராமசாமி மீது  செருப்பு, துடைப்பம் மற்றும் கட்டைகளை வீசினர்.

போலீசாருடன்  ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த போது, அதிமுக பெண் நிர்வாகி ஒருவர்,   கிரிக்கெட்  ஸ்டம்பைக் கொண்டு  அவரைத் தாக்க முயற்சித்தார். அத்துடன் துடைப்பம் கொண்டும் அதிமுக தொண்டர்கள் டிராபிக் ராமசாமியை தாக்கினர். 83 வயதிலும்  தள்ளாடி போராட்டத்தில் ஈடுப்படும் ஒரு முதியவர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டு போலீசார் கண்டும் காணாமல் இருந்தது பெரும் மனதுயரத்தை ஏற்படுத்தியதாக அவரின்,  மாணவியும் உதவியாளருமான  ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.

”இந்தத் தாக்குதலை காவல் துறை எப்போதும் போல நன்றாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர,  டிராஃபிக் ராமசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கவோ, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கையோ எடுக்கவில்லை.” என்று ஃபாத்திமா கூறியுள்ளார்.

 

×Close
×Close