திருப்பதி அருகே, செம்மரம் வெட்ட முயன்றாக கூறி 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில், தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி, அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. தமிழர்களை கைது செய்யும் ஆந்திரா காவல் துறையினர், அவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. அதன் பின்பு, ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி நெடுஞ்சாலை, போன்ற பிரதான சாலையில் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறையின் ரோந்து பணியில் ஈடுபட துவங்கினர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 3 மணியளவில், திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் 84 தமிழர்களைச் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறை கைது செய்துள்ளனர். லாரியில் சென்ற தமிழர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்பு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் சோதனை செய்தனர்.
பின்பு, விசாரணையில் அவர்கள் அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், அனைவரையும் கைது செய்து ஆஞ்சநேயபுரம் சோதனைசாவடியிலேயே தங்கவைத்து விசாரித்துவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் 84 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.