உங்க போராட்டம் எதுவா இருந்தாலும் முதல் ஆளா போவேன்: ஸ்டாலினை நெகிழ்ச்சியாக்கிய நாராயணப்பா வீடியோ!

கலைஞருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறி அவர் பேசிய வீடியோ இணையங்களில் வைரலானது.

M.K.Stalin: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 23-ம் தேதி திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் மாபெரும் பேரணியை நடத்தியது.

இதில் பல்லாயிரக்கணக்கான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கி, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிந்தது. இதில் ஓசூரை சேர்ந்த 85 வயது நாராயணப்பா எனும் தொண்டர் கலந்துக் கொண்டார். கலைஞருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறி அவர் பேசிய வீடியோ இணையங்களில் வைரலானது. ஓசூரில் இருந்து திமுக பேரணிக்கு வந்த 85 வயது நாராயணப்பா வீடியோ: நெகிழ்ந்த உதயநிதி

அவரின் வீடியோவை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நேற்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நாராயணப்பா, ஸ்டாலினை நேரில் சந்தித்திருக்கிறார். இது குறித்து “முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84-வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு!” என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாராயணப்பாவிடம், ’எத்தனை பசங்க உங்களுக்கு?’ என ஸ்டாலின் கேட்க, ‘ஒரு பையன் ஒரு பொண்ணு’ என்கிறார் அந்த பெரியவர். ”இது யார் தெரியுதா?” என டி.ஆர்.பாலுவைக் காட்டி ஸ்டாலின் கேட்க, “அவர் பாலு, அந்த காலத்துல இருந்தே பாத்துட்டு வர்றேன்” என்கிறார். பின்னர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரையும் நாராயணப்பாவிற்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் ஸ்டாலின். பின்னர் கலைஞரின் சிலையும், நினைவு மலரையும் பெரியவருக்கு பரிசளிக்கிறார்.

ஓசூரில் கலைஞர் அமைத்துக் கொடுத்த சமத்துவபுரத்தில் தான் வசிப்பதாகவும், சின்ன வயதில் அவரது தாத்தாவின் இடத்தில் கலைஞருக்கு சிலை வைத்ததாகவும் ஸ்டாலினிடம் நெகிழ்ச்சியாகக் கூறிய நாராயணப்பா, ”உங்க போராட்டம் எதுவா இருந்தாலும், முதல்ல மண்ணெண்ணெய் கேனோட நான் தான் போவேன்” என்கிறார். ”உங்களப் பத்தி நாளைக்கு முரசொலில வருது” என்றுக் கூறிய ஸ்டாலின், அந்த செய்தித்தாளையும் அவரிடம் வழங்குகிறார்.

“எனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சு, உங்கள பாத்ததும் எல்லாம் சரியாகிடுச்சு” என புத்துணர்வுடன் பதிலளிக்கிறார் நாராயணப்பா.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close