850 more Medical seats for MBBS in Tamilnadu Tamil News : இந்த கல்வியாண்டில் ஏழு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அதனால் மருத்துவப் படிப்பில் கூடுதலாக 850 மாணவர்களை இளங்கலை படிப்புகளுக்கு சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது மாநிலத்தில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களை 4,300-ஆக அதிகரிக்கும்.
கடந்த திங்கட்கிழமை, விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் ஊட்டியில் உள்ள மூன்று கல்லூரிகளின் டீன்கள் தலா 150 மாணவர்களுடன் சேர்க்கையைத் தொடங்க அனுமதி பெற்றனர். நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் இடையே இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் ஆய்வுக் குழுக்களை அனுப்பியது. புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனித வள வசதியை ஆய்வாளர்கள் குழு சரிபார்த்தது.
அந்த ஆய்வுக் குழு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆய்வகங்கள், நூலகம், விடுதிகள் ஆகியவற்றை ஆராய்ந்தனர். இதையடுத்து, ஆய்வுக் குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, பெரும்பாலும் சிவில் வேலைகள் ஆகியவற்றை மேம்படுத்தும்படி தமிழகத்தைக் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மா சுப்பிரமணியன், "சரிசெய்யவேண்டிய கல்லூரிகளில் பெரும்பாலானவை சிவில் வேலைகள்தான் தேவைப்படும் மற்றும் அவை பத்து நாட்களில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்டோபரில் இந்தக் கல்லூரிகளில் நாங்கள் மீண்டும் ஆய்வு செய்வோம். நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் ராமநாதபுரத்தில் கூடுதலாக 50 இடங்களைக் கேட்போம். வரும் கல்வியாண்டில் மேலும் 850 இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். அது நடந்தால், மொத்த இடங்களின் எண்ணிக்கை 5,200-ஆக உயரும்" என்று கூறினார்.
தனியார் பயிற்சி நிறுவனங்களில் ஆய்வாளர்கள் மருத்துவ சேர்க்கைக்குக் கடுமையான போட்டியை முன்னறிவித்து வரும் நிலையில், இந்த கூடுதல் இடங்கள் அதிக ஆர்வமுள்ளவர்களைப் படிக்க அனுமதிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 2020-ம் ஆண்டில், நீட் தேர்வின் பொது கேட்டகிரிக்கு மொத்த மருத்துவ இடங்கள் 598-ஆக இருந்தது. மேலும், பிசிக்கு 554, பிசிஎம் -க்கு 527, எம்பிசி-க்கு 521, எஸ்சி -க்கு 443, எஸ்சிஏ -க்கு 375 மற்றும் எஸ்டி -க்கு 346 இடங்கள் என அரசு கல்லூரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவப் பயிற்சியை வழங்க சுகாதாரத் துறைக்கு உதவுவதோடு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பராமரிப்பை இலவசமாக வழங்குவதாக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil