ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 11″வது பட்டமளிப்பு நிகழ்வில் கேரள உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பசந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் சாத்துக்குட்டி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கேரள உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பசந்த் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் அவர், “பட்டமளிப்பு தினம் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல.
இது உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நினைவுபடுத்தும் நாள். இந்நாள் உங்களுக்கு கல்வி கொடுத்த உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் கடமைகளை நினைவூட்டுகிறது.
ஒரு சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் பெயரில் நிறுவப்பட்ட உங்கள் கல்லூரிக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை இந்நாள் வலியுறுத்துகிறது.
மேலும் ஒரு புதிய மதிப்பு அமைப்பை உள்ளடக்கிய நல்லிணக்கம், சமத்துவம், நவீனத்துவம், சமூக நீதி மற்றும் அரசியல் அமைப்பு நெறிகளை உங்களுக்குள் புகுத்த முயற்சித்த உங்கள் நாட்டிற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை இந்நாள் உணர்த்துகிறது.
இந்த நாகரீக நற்பண்புகளை நீங்கள் உண்மையாக உள்வாங்கி நடைமுறைப்படுத்தும் போதுதான் உங்கள் கல்வி மதிப்பு மிக்கதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் மாறும் என்று கூறினார்.
தொடர்ந்து, 894 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் வழங்கி கௌரவித்தார்.
இதில் ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சைலஜா வேணு, செயலாளர் ராஜ்குமார், இணை செயலாளர் வல்சலா குஞ்சு, நிர்வாக அறங்காவலர் ஸ்ரீஹரி மற்றும் கல்லூரியின் துணைத் தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“