எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வை பொதுத் தேர்வு என்று தவறுதலாக குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும் அதற்கான தேர்வு ஆயத்தப் பட்டியலை மார்ச் 13ம் தேதிக்குள் சென்னைக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டு இருந்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு முகநூல் பதிவு
இந்த குளறுபடி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் 8ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான தேர்வை பொதுத் தேர்வு என்று தவறுதலாக குறிப்பிட்டதாக தேர்வு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொலைபேசி மூலமாக தன்னை தொடர்பு கொண்டதாக முகநூலில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, 8ம் வகுப்பு தனி தேர்வு என்பது சுற்றறிக்கையில் பொதுத் தேர்வு எனக் குறிப்பிடப்பட்டதாகவும் அதுவே குழப்பத்திற்கு காரணம் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஓட்டுனர் உரிமம் மற்றும் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான, தனித்தேர்வுக்கான அறிவிப்புதான் அது என்றும் பள்ளி மாணவர்களுக்கான 8 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு அல்ல அது என்றும அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த விரிவான அறிக்கையை, தேர்வுகள் துறை இயக்குனரகம் வெளியிடும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, 8-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தனித்தேர்வர்களுக்கானது என்று அரசு தேர்வுகள் இயக்குநரும் விளக்கம் அளித்துள்ளார்.