விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கிய தங்கமணி: 9 பக்க எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர் மீது பதியப்பட்ட 9 பக்க எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.

  • 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது சொத்து விவரங்களையும், மனைவி மற்றும் மகன் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரங்கள் வடிவில் தாக்கல் செய்தார்.
  • அப்போது, அவரது மகன் தரணிதரன் முருகன் எர்த் மூவர் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையில், அந்த நிறுவனமானம் ஆவணங்களில் மட்டுமே இருந்ததாகவும், நிஜத்தில் அப்படியொரு நிறுவனம் செயல்பாட்டில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. அமைச்சரின் சட்டவிரோத பணத்தின் ஆதாரத்தை மறைக்கவே இந்நிறுவனம் போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
  • அதே போல், தங்கமணியின் மனைவி சாந்தி, ஹவுஸ் வைப் என்றும், எவ்வித தொழிலும் ஈடுபடவில்லை. ஆனால், சட்டவிரோத பணத்தை மறைத்திட அவர் தொழில் நடத்துவதாகவும், அதற்கு வருவான வரி கட்டுவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலக்கட்டத்தில் தங்கமணி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பெயரில் மொத்தமாக 7,45,80,301 மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் அவரது சேமிப்பு பணத்தை மதிப்பிடுகையில் 2,60,08,282 ரூபாய் தான் வந்துள்ளது. அதன்படி, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 4,85,72,019 ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிகுவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், தங்கமணியின் மருமகன் எஸ்.தினேஷ் குமார், MANTARO நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்களில் ஒருவராகவும் (நியூஸ் ஜே சேனல்), மெட்ராஸ் ரோட் லைன்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான ஜெயஸ்ரீ செராமிக்ஸ், ஸ்ரீ ப்ளை அண்ட் வெனீர்ஸ், ஏஜிஎஸ் டிரான்ஸ்மோவர், ஸ்மார்ட் டிரேட் லிங்க்ஸ், ஸ்மார்ட் டெக்., ஸ்ரீ ப்ளைவுட்ஸ் மற்றும் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் நிறுவனங்களின் பாட்னராகவும் உள்ளார்.
  • அவரது தந்தை சிவசுப்ரமணியன், MRL லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிற சொத்துக்கள் பெயரில் 100க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
  • தினேஷ் குமார் மனைவி டி.லதாஸ்ரீ, ஜெய ஸ்ரீ நிறுவனத்தின் உரிமையாளராகவும், ஜெயஸ்ரீ’ஸ் பில்ட் புரோ நிறுவனத்தின் பாட்னராகவும் உள்ளார்.
  • இதுமட்டுமின்றி, தங்கமணி மற்றும் அவரது மகனும், தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்த பணத்தில் பல சொத்துகளை வாங்கியிருக்காலம் சந்தேகிக்கப்படுகின்றனர். முறைகேடாக சம்பாதித்த பணத்தில் பெருமளவை கிரிப்டோகரண்சியில் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கிகுவித்ததன் காரணமாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரனிசந்திரன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 9 page fir copy of former minister thangamani corruption act case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com