சுதந்திரப் போராட்ட வீரர் 99 வயது முதியவர் தியாகிகள் பென்ஷனுக்கா விண்ணப்பித்துள்ளார். அவரை 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார் கண்டித்துள்ளார்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கபூர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரான கபூர் 1997ம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்தி பரிந்துரை அளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் பரிந்துரையின்படி கபூரின் மனுவையும் ஆவணங்களையும் பரிசீலனை செய்த பெரம்பூர் வட்டாட்சியர் 2011ல் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு விளக்கமான கடிதத்தை அனுப்பினார். வட்டாட்சியர் அனுப்பிய கடிதத்தை பரிசீலித்த சென்னை மாவட்ட ஆட்சியர் 2015ல் தியாகி கபூரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார். தியாகி கபூர் 2015ம் ஆண்டு உரிய ஆவணங்களுடன் ஆஜரானார். ஆனாலும், தியாகி கபூருக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 23 ஆண்டுகளாகியும் தியாகி கபூர் ஓய்வூதிய கோரிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு பென்ஷனும் வழங்கப்படவில்லை.
தியாகி கபூர் இறுதியாக தனக்கு ஓய்வூதியம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், “தனது இறுதி மூச்சுக்கு முன், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கபூர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். மனுதாரர் 99 வயதுடையவர் என்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். எனவே, இந்த மனுவுக்கு நவம்பர் 6ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"