திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக கட்டிடத்தில் இன்று (அக்.31) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டுக்கு உட்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மேயரிடம் தெரிவித்தனர்.
இதில் திமுக மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் பேசுகையில்; திருச்சி மாநகராட்சி பகுதியில் மாடுகளைப் பிடிப்பதற்கு தனியாருக்கு கொடுக்கப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன், திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் ஜவகர் பேசுகையில், ஸ்ரீரங்கம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், பரிந்துரைத்த அமைச்சருக்கும் காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , த.துர்காதேவி, பு.ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் ஏற்கனவே சாலைகளில் மாடுகளின் தொந்தரவுகளால் பல்வேறு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“