வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தியாகராஜன் குமாரராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண் இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவின்படி ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு வங்கி பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தினர்.
மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவின் பலனை தனக்கும் வழங்க வேண்டுமென மனுதாரர் கோர முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.