கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக பல்வேறு நபர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வலதும் இடதுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கிடையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
அப்போது அதிமுக தலைவர்கள் என்ன நோக்கத்திற்காக மறு விசாரணை நடத்தப்படும் எனக் கேள்வியெழுப்பினார்கள். தொடர்ந்து, அவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க-வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஜெயலலிதா தங்கி வந்த கோடநாடு பங்களாவும் கவனம் பெற்றது.
கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு எஸ்டேட்டில் காவல் பணியில் இருந்த ஓம் பகதூர் என்ற செய்யூரிட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயங்களுடன் மீட்கப்பட்டார். கோடநாடு வழக்கில் சயான் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் பெயரும் அடிப்பட்டது.
இந்த நிலையில், கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மனைவி, குழந்தையுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது. சயான் பிழைத்துக் கொள்ள, மனைவியும், குழந்தையும் இறந்தனர்.
இப்படி, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களைப் பற்றி விலகாத மர்மங்கள் பல இருக்கின்றன. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கு கோரியிருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சாட்சியப்பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“