திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை விவகாரம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை வரும் 7-ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என வர்த்தக, சிறுகுறு கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் விடுத்துள்ள நோட்டீஸில், “தஞ்சாவூர் கி.மீ.80.000 முதல் திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை கி.மீ. 136.490 வரை என் எச் - 67 தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குரிய நிலங்கள் சாலையின் இருபுறங்களிலும் உள்ளன.
அரியமங்கலம் பால்பண்ணை, ரைஸ்மில், ரயில்நகர், ஆயில்மில், காட்டூர், கைலஷ்நகர், மஞ்சத்திடல், விண்நகர், பாலாஜிநகர், மலைக்கோயில், தி.நகர், திருவெறும்பூர், பெல் கணேசா, பெல் ட்ரைனிங் சென்டர், அரசு கல்லூரி பகுதி, அண்ணா வளைவு, பெல்நகர், துவாக்குடி, தேவராயநேரி, புதுக்குடி வரை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் நிலங்களாகவும், வீடுகளாகவும், மேற்கூரைகளாகவும் ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை வரும் 7- ஆம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தவறினால் 8-ஆம் தேதி தாங்கள் வந்து ஆக்ரமிப்புகளை அகற்றுவோம் என அத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அங்கு சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுக்குமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தும் கொடுத்தும் திட்டம் கிடப்பில் இருந்து வருவதும், குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“