Farmers Protest in Trichy : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 58-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவின் தீர்ப்பு விசாரணையில் இருக்கும்போது திருச்சி மாநகர காவல்துறையினரும், திருச்சி மாநகராட்சி ஊழியர்களும் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பிரித்தும், அதன் உள்ளே வைத்திருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர். இதனால் திருச்சி சிந்தாமணி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
முன்னதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 58 வது நாளான இன்று காவேரி ஆற்றில் இறங்கி கர்நாடகாவில் நடைபெறும் பாந்த்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரியில் தண்ணீர் திறக்கும்வரை போராட்டம் தொடர்வோம் என காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“