தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இம்மாதம் 29ம் தேதி வரை நாள் கெடு அளித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் இந்தக் கால அவகாசம் நாளையுடன் முடிவையும் நிலை உள்ளது. இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் விவாதங்களும், பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டங்களும் நடைபெற்றது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பாஜக-வுடன் இணைந்து செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். பின்னர் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டாலும் காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படும் என்ற செய்தியும் வெளியானது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, இது குறித்து தஞ்சையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். இதில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் காவிரி தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும். பின்னர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது குழுவோ அமைத்தால் அதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பேட்டியில் கூறினார்.
ஏற்கனவே காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையைக் கூட்டியுள்ளது. பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும், காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே அமைக்க வேண்டும். அதற்குப் பதிலாக வேறு எந்தக் குழுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.