‘தொழில்முனைவோராக வெற்றி பெறுங்கள்’ – சென்னையை அசத்தும் திருநங்கைகள் தேநீர் கடை!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் திருநங்கைகள் அமைப்பின் ஆதரவோடும் ஐந்து திருநங்கைகள் சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஆரம்பித்துள்ள தேநீர் கடை, மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

சமூகத்தில் மக்களின் வாழ்வியல் நிலைப்புத் தன்மை என்பது பொருளாதர அடிப்படையில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போது, சமூகத்தால் புறம் தள்ளப்பட்ட திருநங்கைகள் சமூகம் பெரும் இன்னலை சந்தித்து வருகிறது. திருநங்கைகளை பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய, அவர்களை தொழில்முனைவோர்களா உருவாக்க, சில திருநங்கை அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முயன்று வருகின்றன.

அந்த வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் திருநங்கைகள் அமைப்பின் ஆதரவோடும் ஐந்து திருநங்கைகள் சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஆரம்பித்துள்ள தேநீர் கடை, மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. த்ரீ ரோசஸ் மற்றும் இந்தியா ஒன் பிராண்ட் சர்வீஸ் ஆகிய அமைப்புகள் மற்றும் திருநங்கைகள் நல அமைப்புகளான சகோதரன் மற்றும் தோழி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த தேநீர் கடையை, திருநங்கைகளின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்னைகளையும் மையமாக வைத்து வெளியான ‘காபி கபே’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்வை ஒருங்கிணைத்த திருநங்கை சபி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். திருநங்கைகள் பொருளாதார ரீதியில் வெற்றிப் பெறும் நோக்கில், எங்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க முன்வந்த த்ரீ ரோசஸ் அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பையாக மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு திருநங்கை அமைப்பிடமிருந்து, த்ரீ ரோசஸ் நிறுவனத்தின் அறிமுகத்தைப் பெற்றோம். மேலும், எங்களோடு இணைந்துள்ள இந்தியா ஒன் பிராண்ட் சர்வீஸ் நிறுவனமும் திருநங்கைகளை தொழில்முனைவோராக்க விரும்பும் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பியது.

நிறுவனங்களின் ஒத்துழைப்பால் ஊக்கமடைந்த எங்கள் அமைப்புகளைச் சார்ந்த திருநங்கைகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து தேநீர் கடை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கினோம். அதன் படி, சென்னையின் ராயப்பேட்டையில் கடையை அமைத்துள்ளோம். தேநீர் தயாரிப்பில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கியுள்ளோம். கடை அமைந்துள்ள ராயப்பேட்டையைச் சுற்றியுள்ள மக்கள் எங்களது கடைக்கு நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.

இதனால், வடபழனி, அம்பத்தூர், எண்ணூர், பொன்னேரி ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். சென்னையில், சுமார் 2700 திருநங்கைகளின் தகவல்கள் எங்களிடம் உள்ளது. அவர்களின் தகுதிக்கேற்ப பணிகளை பரிந்துரைத்து வருகிறோம். தற்போது தேநீர் கடையை ஆரம்பித்துள்ள திருநங்கைகளை பார்த்து மற்ற திருநங்கைகளும் தொழில்முனைவோராக விரும்பம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் உற்சாகமாக ஈடுபட உள்ளோம்’ என்றார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: A leap forward tea stall open in chennai royapettah by transgenders

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com