Advertisment

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா; 9 வயது பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் விலங்கியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் வியாழக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா; 9 வயது பெண் சிங்கம் உயிரிழப்பு

சென்னை அருகே உள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் வியாழக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், வண்டலூர் விலங்கியல் மூடப்பட்டுள்ளது. அங்கே சிங்கங்கள், புலிகள், வெள்ளைப் புலிகள், சிறுத்தைகள் பல வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் லயன்ஸ் சஃபார் என்கிற பகுதியில் 11 சிங்கங்கள் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிங்கங்களுக்கு பராமரிப்பாளர்கள் உணவுகளை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 5 சிங்கங்களுக்கு உடல்நலக் குறைவு எற்பட்டுள்ளது. சிங்கங்கள் பசியில்லாமல் இருந்துள்ளன. அவற்றின் உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வண்டலூர் விலங்கியல் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் குழுவினர் அந்த சிங்கங்களை பரிசோதனை செய்தனர். அதே போல, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் மருத்துவர்கள் வந்து சிங்கங்களை ஆய்வு செய்தனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கும் ஏதேனும் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த சிங்கங்களின் எச்சங்களை சேகரித்து பரிசோதனைக்காக மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - உயர் பாதுகாப்பு விலங்குகளின் நோய்கள் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (ICAR-National Institute of High Security Animal Diseases) அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே பரிசோதனையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வண்டலூர் விலங்கியல் பூங்காவில் லயன் சஃபாரில் உள்ள சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவற்றின் உடல்நிலை கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான், பூங்காவில் இருந்த 11 சிங்கங்களில் ஒன்றான நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்ததால் பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விலங்குகள் பராமரிப்பாளர்களுக்கு கவச உடை அணிந்து பராமரித்து வருவதாகவும் பூங்கா நிர்வாக அலுவலர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த பெண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் இணை நோய் இருந்ததால் உயிரிழந்ததா என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Vandalur Lions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment