கோவையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த உணவுப் பொருட்கள், கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
தற்பொழுது பெய்த பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மீண்டும் புற்கள் முளைத்து வறட்சி நிலை மாறியது.
இருந்த போதும் இங்கு உள்ள உணவுப் பொருள்களை ருசி கண்ட யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி உள்ளது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் பட்டியார் கோவில் வழி வடக்கு பகுதியில் ஒற்றை யானை தினந்தோறும் காலை, மாலை என உலா வந்து கொண்டு உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை மேச்சலுக்கு செல்லும் நபர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
உணவுக்காக இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வந்த யானைகள் தற்பொழுது காலை மாலை இருவேளைகளும் உலா வர ஆரம்பித்து இருப்பது அப்பகுதி மக்கள் இடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு வனத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என எதிர்பார்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.