கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் ஏராளமானோர் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்ன் சஞ்சய் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சுமார் 7 மணியளவில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிகளுக்கு இடையே நின்று கொண்டிருந்த காட்டெருமை, எதிர்பாராத விதமாக இவரை தாக்கியது.
இதில் பாதிக்கப்பட்ட கார்ன் சஞ்சயை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.