scorecardresearch

75 சுதந்திர தின வீரர்கள்: 75 அஞ்சல் அட்டை: திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் புதுமை

காலத்தின் சுழற்சியால் கடிதங்கள் தற்போது காட்சிப் பொருளாகி வருகிறது. இது மொழியின் விழிகளை ஒளி இழக்கச் செய்யும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக உள்ளது.

Trichy Puttur Branch Library Readers association
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம்

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, 75 சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து, 75 நூலக வாசகர்கள், 75 அஞ்சல் அட்டையில், 750 வினாடியில் கடிதம் எழுதும் விழிப்புணர்வு விழா திருச்சியில் மாணவர்களுடன் உற்சாகமாக நடைபெற்றது.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், தென்னூர் நடுநிலைப்பள்ளி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மறந்துப் போன கடிதம் எழுதும் வழக்கம் மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியாக மேற்கண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைக்க
மாணவர்கள் 750 வினாடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறிப்பினை எழுதியும், தேசிய சின்னங்கள் வரைந்தும் கடிதத்தினை அஞ்சல் பெட்டியில் செலுத்தினர்.

இந்நிகழ்வு குறித்து புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார் கூறுகையில், காலத்தின் சுழற்சியால் கடிதங்கள் தற்போது காட்சிப் பொருளாகி வருகிறது. இது மொழியின் விழிகளை ஒளி இழக்கச் செய்யும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக உள்ளது.
கணினி யுகத்தில் கருத்து பரிமாற்றங்களுக்கு இணையதளம், அலைபேசி, முகநூல், வாட்ஸ்அப் என நம் முன் பல்வேறு முப்பறிமாணங்கள் உள்ளன. இவை கடிதங்களின் அவசியத்தை குறைத்து விட்டாலும், அதன் வரலாறும், பெருமைகளும் அளப்பரியது.

பழங்காலத்தில் புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்ட தூது, கடிதங்களுக்கான ஆரம்பமாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்த 18-ம் நூற்றாண்டில், தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு பொதுமுறை இருக்க வேண்டும் என்பதற்காக தபால் தலைகளை அறிமுகப்படுத்தினர்.
இந்தியாவில் 1854-ம் ஆண்டு முதல் தபால்தலை வெளியிடப்பட்டு, கடிதப் போக்குவரத்து தொடங்கியது. ஒவ்வொரு கடிதத்தை கொண்டும், அதன் வரலாற்றை எடுத்துரைக்கலாம். தேச தந்தை மகாத்மா காந்தி, கடிதம் எழுதும் பழக்கத்தை தன் வாழ்நாளில் கடைசி வரையில் விடவில்லை. அவரின் கடிதங்கள், பொக்கிஷங்களாக பல்வேறு அருங்காட்சியகங்களில் இப்போதும் இருக்கின்றன. அவர், கடிதங்களில் தெரிவித்த கருத்துகள், நாட்டின் சுதந்திர வேட்கையை மக்களிடம் விதைத்தது.

இதனால் தான், காந்தியின் படத்தை கொண்டு, இந்தியா மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. கால் அணா, அரை அணா, ஒரு அணாவிற்கு அஞ்சல் அட்டைகள் உருவாக்கப்பட்ட நிலையில் அது இன்றைக்கு 50 பைசா அஞ்சல் அட்டையாக இருக்கிறது.
இதேபோல், அஞ்சல் உறை மற்றும் இன்லேண்ட் லெட்டர் ஆகியவையும் நடைமுறையில் இருக்கிறது. கடிதம் எழுதுவது என்பது, தனி சிறப்பு வாய்ந்ததாகும். ஒருவரை நலம் விசாரிப்பதோடு, இங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பதிவிட்டு, அதிலும் தனது தாய் மொழியில், பேச்சு நடைமுறை வார்த்தைகளை பதிவு செய்வது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

அவ்வகையில், 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, 75 சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து,
75 நூலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் 75 அஞ்சல் அட்டையில், 750 வினாடியில் கடிதம் எழுதியும் தேசிய சின்னங்கள் வரைந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் மூலம் அக்கால நிகழ்வுகளை இன்றைக்கும் நாம் நினைவு கூற முடியும். அதனால் தான், காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக கடிதங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு கடிதம் எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
செல்போன் பயன்பாடு வந்ததும், அதன் மூலம் தகவல் பரிமாற்றம் வந்ததால், கடித போக்குவரத்து வெகுவாக குறைந்து விட்டது.
முன்பு ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி, பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம், நண்பர்கள் தினம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து அட்டை மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வாடிக்கையாக இருந்தது. பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, இந்த வாழ்த்து அட்டைகளை இளைஞர்களும், யுவதிகளும் வாங்கி, வாழ்த்துக்கள் எழுதி தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அஞ்சலில் அனுப்புவர். வாழ்த்து அட்டை பெறும் நபர்கள், அதை பிரித்து பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
இப்படி பல லட்சம் மனங்களை ஈர்த்த வாழ்த்து அட்டை கலாச்சாரமும் மறைந்து விட்டது. செல்போன் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் சரிந்து விட்டது. செல்போன்கள் புழக்கம் அதிகரித்த பிறகு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை மட்டுமே வாழ்த்துகளை சொல்கிறது. தற்போது பண்டிகைக்கான வாழ்த்து அட்டைகள் இல்லை என்பது வேதனைக்குரிய தகவல்.
இது போன்ற கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் தான், எதிர்கால சந்ததிக்கு நம் மொழியின் எளிமை, பெருமை, தொன்மை, பன்மையை எடுத்துச் செல்லும் ஆதாரங்கள். இவற்றின் மூலம் நிச்சயமாக மொழியை பாதுகாக்க இயலும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்காக கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை உருவாக்கி, வாழ்த்துகளை பரிமாறும் பழக்கத்தை வழக்கமாக்கினால் நினைவுகளாக மட்டுமன்றி, நிஜங்களாகவும் அவை வியக்க வைக்கும். இன்றைக்கு தபால் நிலையங்கள் மூலம் கடிதங்களை, அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுப்புகின்றன.
50 பைசா அஞ்சல் அட்டையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரில் இருக்கும் நபருக்கு தகவல்களை தர இயலும். அதை ஏன் நாம் இன்றும் பயன்படுத்தக்கூடாது என்ற கேள்விகள் ஒவ்வொருவரின் மனதிலும் எழ வேண்டும் என்பதே கடித ஆர்வலர்களின் விருப்பம்.
ஆகையால், மொழியின் வலிமையை உலகிற்கு காலம் கடந்தும் விளக்கிட அனைவரும் கடிதம் எழுத வேண்டியதும் காலத்தின் கட்டாயம் ஆகும். மாண்டு போன வழக்கம் மீண்டும் துளிர்க்க வேண்டும். ‘‘மனதில் இருந்து வெளிப்படும் தமிழ் வார்த்தைகளை கையால் எழுதி, வாழ்த்து தெரிவிப்பது சில வருடங்களுக்கு முன்பு வரை, வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை அதை மறந்து நிற்கிறது. மீண்டும் அஞ்சல் அட்டைகளில் வாழ்த்து எழுதுவதால், மாண்டு போன ஒரு வழக்கம், மீண்டும் துளிர்க்கும்.
எனவே, இளம் தலைமுறையினர்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு அஞ்சல் அட்டைகளை விலையில்லாமல் வழங்கி இந்த நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றே என்றார். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார், நூலகர் புகழேந்தி நன்றி கூறினார்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A new initiative in trichy to increase the habit of letter writing