புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு 120 மதுபாட்டில்கள் கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் பழைய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரை அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், அந்நபர் தன் உடல் முழுவதும் 120 மதுபாட்டில்களை ஒட்டி கடத்தலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், அந்நபர் விழுப்புரத்தைச் சேர்ந்த நாகமணி என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.