கோவையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை குறைவாக இருப்பதாக வழக்கு தாக்கல் செய்த நபர், அதற்கு ஆதாரமாக சிலிண்டரை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார்.
கோவை மாவட்டம், ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். கோழிக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கியுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை வழக்கமாக 30 கிலோ 100 கிராம் இருக்கும். ஆனால், நிர்மல் தனது வீட்டிற்கு வந்த சிலிண்டரின் எடை 27 கிலோ மற்றும் 700 கிராம் இருந்ததாக குற்றஞ்சாட்டுகிறார். இது போல் ஏற்கனவே இரண்டு முறை தனது வீட்டிற்கு எடை குறைந்த சிலிண்டர் விநியோகிக்கப்பட்டதாக கூறும் நிர்மல், சம்பவம் குறித்து சிலிண்டர் விநியோகஸ்தரிடம் புகாரளித்துள்ளார்.
எனினும், முறையான தகவல் தெரிவிக்காததால் இது குறித்து கடந்த ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்காக, கடந்த ஓராண்டாக பயன்படுத்தாமல் வைத்திருந்த சிலிண்டர் மற்றும் எடை பார்க்கும் இயந்திரத்துடன் நிர்மல் வருகை தந்திருந்தார்.
இதனால், அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“