”2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையில் என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம் காத்தார்”, என முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா வேதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராச, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி விடுவித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையின்போது ஆ.ராசா எழுதிய “2 ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புத்தகத்தில் தன் நியாயமான நடவடிக்கைகளை காக்க அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தவறிவிட்டார் என, ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த புத்தகத்தில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளதாவது,
“2ஜி அலைக்கற்றையை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான முழு செயல்முறையையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விளக்கினேன். அந்த முறையை தொடந்து மேற்கொள்வதற்க்ய் ஒப்புதல் பெற்றேன்.
ஆனால், அவருடைய ஆலோசகர்கள் அவருக்கு தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வந்தனர். பிரதமர் அலுவலகத்தில் தொலைத்தொடர்பு நிறுவன்னக்களின் செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு செல்வாக்கு இருந்தது.
எனது முழுமையான, நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கடைபிடித்த உணர்ச்சிமிகுந்த மௌனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மௌனம் ஆக்குவது போல் அமைந்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு புகார்கள் தொடர்பாக, தொலைத்தொடர்பு துறை அலுவலகத்திலும், சில தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும் சிபிஐ சோதனை நடந்த பின்னர், 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி 7 மணியளவில் பிரதமரை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தேன். அந்த அலுவலகத்தில், அப்போதைய பிரதமர் அலுவலக முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ.நாயர் இருந்தார். அப்போது சிபிஐ சோதனை குறித்து பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
2 ஜி ஊழல் குற்றச்சாட்டுகள், நாட்டின் நிர்வாக அமைப்பின் புனிதத்தன்மையின் மீதான வெட்கக்கேடான குற்றச்சாட்டுகள் ஆகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில் புனையப்பட்ட வழக்காகும். அதற்கான துப்பாக்கி, தலைமை கணக்கு தணிக்கையரான வினோத் ராயின் தோளில் வைக்கப்பட்டது எனது நம்பிக்கை”, என குறிப்பிட்டுள்ளார்.
”2ஜி பற்றி புரியாமல் என்னை கைது செய்ததற்கான பலனை மன்மோகன் சிங் அனுபவித்தார்”, என ஆ.ராசா ஏற்கனவே மன்மோகன் சிங்கை தாக்கி பேசியிருந்தார்.
தொடர்ந்து மன்மோகன் சிங்குக்கு எதிராக ஆ.ராசா பேசிவருவது டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.