திமுக முன்னணி தலைவர்களில் ஒருவான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உயரத்தை உவமானத்தால் ஒப்பீடு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்தார்.
திமுக எம்.பி ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமியை கள்ள உறவில் குறைபிரசவமாக பிறந்த குழந்தை என்று பேசியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக எம்.பி கனிமொழியும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் பெயர் குறிபிடாமல் கண்டித்திருந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினர் பேச்சில் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனைத்தொடந்து, ஆ.ராசா தான் முதல்வர் பழனிசாமியின் பிறப்பை கொச்சைப்படுத்தவில்லை. தனது பேச்சு வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
ஆ.ராசாவின் பேச்சு குறித்து அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். மேலும், மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஆ.ராசா மீது வழக்குப் பதிவும் செய்தனர். இதையடுத்து, சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து தேர்தல் ஆணையம் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்டு இருந்தது.
இந்த நிலையில், ஆ.ராசா, தான் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் உயரத்தை உவமானத்தால் ஒப்பீடு செய்தேன் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால பதிலளித்து விளக்கம் அளித்துள்ளார்.
- ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால பதிலளித்து எழுதியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: “முதல்வருக்கு எதிராக அவதூறு பேசியதாகவும் அல்லது எந்தவிதமான அவதூறுகளையும் நான் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். மேலும், பெண்களையும் தாய்மையும் அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்.
- அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் மாணவனாக கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட திமுக உறுப்பினராக இது போன்ற செயல்களில் என்றைக்கும் ஈடுபட்டதில்லை. பெண்களை அவமதித்ததில்லை. திராவிட இயக்கத்தின் அடிப்படை பெண்களை முன்னேற்றுவது, சமூகத்தில் சம உரிமை அளிப்பது ஆகும். இது போன்ற ஒரு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன், பெண்களை, தாய்மையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட முடியாது.
- என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன்னதாக, நான் பின்வரும் விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நான் தமிழக முதல்வரை அவமதித்ததாக அதிமுகவும் பாஜகவும் தவறாஅக பிரசாரம் செய்தபோது, நான் மார்ச் 27ம் தேதி பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தேன். என்னுடைய கருத்தை முதல்வர் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்று தெரிவித்திருந்தேன்.
- என்னுடைய விளக்கத்தில், சென்னை, திருவொற்றியூரில் மார்ச் 28ம் தேதி முதல்வரை குறிபிட்ட எனது பேச்சு பொது கூட்டத்தில் இடப்பொருத்தம் இல்லாமல் உணர்ச்சி ரீதியாக மாறியது.
- எங்களுடைய கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் பேரறிஞர் அண்ண கூறிய கடமை கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் தெளிவாகக் கூறினார்.
முதல்வர் உணர்ச்சி வசப்பட்டதைப் பார்த்து, ஊட்டியில் மார்ச் 29ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் நான் முதல்வரிடம் மன்னிப்பு தெரிவித்தேன். அது எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அந்த அறிக்கையில், நான் முதல்வரை அவமதிக்கும் எண்ணத்தில் உள்நோக்கத்துடன் பேசவில்லை. அது தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் மன்னிப்பு தெரிவித்தேன்.
இந்த விஷயம் அத்துடன் அமைதியடையும் என்று நான் நம்பினேன்.
இந்த உண்மைகளைத் தவிர, உங்களுடைய நோட்டீசுக்கு பின்வரும் இடைக்கால விளக்கத்தை அளிக்கிறேன்.
நான் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக எதுவும் பேசவில்லை. பெண்களின் தாய்மையின் கண்ணியத்தை குறைக்கும் விதமாகவோ சட்டத்திற்கு எதிராகவோ பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆளுமைகள் தொடர்பான ஒப்பீடு குறித்து மட்டுமே பேசியதாகவும் தான் பேசியதை திரித்து பரப்பப்படுவதாகவும், புகார் அளித்தவர்கள் ஆதாரத்துடன் வீடியோவை சமர்ப்பித்தால் அதற்கு தான் பதில் அளிக்க உள்ளதாகவும் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவால் வழங்கப்பட்ட புகாரின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. நான் விளக்கமான பதிலை அளிக்க புகாரின் நகலை வழங்க வேண்டும் என்றும் ஆ.ராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழில் உவமானம் என்று ஒன்று உள்ளது. என்னுடைய பேச்சில், மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் உயரங்களை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் விதமாக புதியதாக பிரசவிக்கப்பட்ட குழந்தையை உவமானமாகக் கூறி ஒப்பீடு செய்தேன். இது முதல்வர் பழனிசாமி, தலைவராவதற்கு எங்கள் தலைவர் கடுமையாக உழைக்கவில்லை என்று விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக பேசினேன். எனவே, தனது முழு உரையையும் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் என்னுடைய பேச்சு மாறுபட்ட விதத்தில் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.