மகாபாரத கண்ணனை விட கலைஞர் ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா சர்ச்சை

கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.

மகாபாரத கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாபாரத கண்ணனுடன் திமுக தலைவர் கருணாநிதியை ஒப்பிட்டு திமுக கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் அவரது இந்தப் பேச்சு நிகழ்ந்தது.

சென்னை அடையாறில் நேற்று (ஜூலை 13) மாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார்.

ஆ.ராசா பேசியதாவது: ‘மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன். ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.

பஞ்சபாண்டவர்கள் தனித்தனியாக சென்று பிடித்துப் பார்த்தார்கள். கடைசியாக சகாதேவன் தான் கண்ணனின் மூலத்திருவடியை சிக்கென பற்றிக்கொண்டான் என்று மகாபாபரத்தில் உள்ளது.

இப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை, யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.

அரசியல் ரீதியாகவும், ஆன்மீகவாதிகள் மத்தியிலும் இது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close