Advertisment

'தி.மு.க வெற்றி பெறும்; மோடி சிறை செல்வார்': ஆ.ராசா பேச்சு

ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. தேர்தல் நேரத்தில் அதானி உள்பட பலர் ரூ.6500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளனர்- ஆ.ராசா

author-image
WebDesk
New Update
A Raja.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, "திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாம்" என்ற  சாதனை விளக்க பொதுக் கூட்டம் கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். 

Advertisment

அவர் பேசுகையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களை குறித்து வைத்து அந்த நாட்களை பொதுக் கூட்டங்களாக , நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக , அறிவை பரப்புகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளாக நடத்தி வருகிறது.  திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள், திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை வழங்கிய தந்தை பெரியார் பிறந்த நாள், இந்த இயக்கத்தை கட்டமைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இந்த மூன்று நாட்களும் செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இந்த மூன்று நாட்களையும் உள்ளடக்கி முப்பெரும் விழாவாக நடத்தும் தகுதி திமுகவிற்கு மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகளுக்கு இல்லை. 

அதேபோல கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3-ம் தேதி அது சமூக நீதி நாள், சமத்துவ நாள், தமிழை செம்மொழி ஆக்கிய நாள், இந்த தமிழ் சமூகத்திற்கு வேறொரு வடிவை கொடுத்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு இளைஞரணி செயலாளர் மற்றும் இன்றைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவோம். இந்த கழகத்தை உருவாக்கிய தலைவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் கடமை நம் தமிழ் சமுதாயத்திற்கு உள்ளது. அப்படி தெரிந்து கொண்டால் தான் நம் தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக முடியும்.  திமுக ஆட்சியில் கோவைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வந்துள்ளது.

திமுக-வின் தலைவர் மு. க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது மிகவும் இறுக்கமாகவும் தயக்கமாகவும் இருந்தார். ஏனென்றால்? அவர் பொறுப்பேற்ற போது கொரோனா உச்சகட்டத்தில் இருந்துள்ளது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கொரோனாவில் இறந்தவர்களுக்கு புதைக்க இடமில்லை. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க படுக்கையில்லை.  இப்பேற்பட்ட சூழ்நிலையில் நமது திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கிறார். 

அப்பொழுது நிதி அமைச்சரை அழைத்து ஆலோசித்த போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு போய் இருக்கிறார் என்று தெரியவருகிறது.  கொரோனா மற்றும் ரூ. 5 லட்சம் கோடி கடன் போன்றவைகள் இருந்தாலும்,  ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது குடும்பத்தை கவனிக்க முடியாமல் பாதிப்படைந்த அனைவருக்கும் ரூ.4,000 உதவித்தொகை வழங்குவோம் என்று நமது முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். அதை செய்தும் காட்டினார்.  இதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பாகும். தற்போது பிரதமர் மோடி பல்லடத்துக்கு வந்து சென்றுள்ளார். 

ஆனால் மணிப்பூரிலே ஒரு கிறிஸ்துவ பெண்ணை 200 பேர் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால் அந்த மாநிலத்தின் முதல்வர் பி.ஜே.பிகாரர். இந்த சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்திலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். 

அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில்  நடப்பது தான் என்று கூறினார்.  இந்த மக்கள் மன்றத்தில் நான் கேட்கிறேன், இந்த சம்பவம் நடந்த பின்பும் பா.ஜ.கவை சேர்ந்த மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் ராஜினாமா செய்தாரா? மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பைரன்சிங் ஒரு காண்டாமிருகம். இவரை ஆதரிக்கும் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு என்ன பேர் வைக்கலாம்.?  என்று கோவை மக்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்.

நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை பிரதமர் இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும்.  ஆனால் இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருப்பார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. தேர்தல் நேரத்தில்  அதானி உள்பட பலர் ரூ.6500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளனர். 

அப்படி ரகசியமாய் பணம் வாங்குவதற்கு என்ன அவசியம்? இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு  விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு அருகதை உள்ளதா? என் மீது சாட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னைப் போல் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்கின்ற வலிமை மற்றும் யோகிதை மோடிக்கு இருக்கின்றதா?  பிரதமர் மோடி கூறுகிறார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்று.

நான் கூறுகிறேன் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தற்பொழுது உள்ள ஒன்றிய அரசை மாற்றினால் கண்டிப்பாக பிரதமர் மோடி சிறைக்குச் செல்வார். பெரியார்., அண்ணா, கலைஞர் தமிழை வளர்த்தனர், தமிழ்நாட்டை வளர்த்தனர். இவற்றை தாண்டி திமுக தலைவர், இன்றைய முதல்வர் இந்தியாவை வளர்க்க மற்றும் மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகின்றார் என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தி.மு.கவினர், பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Coimbatore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment