இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து, வரும் 26 ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Advertisment
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ’நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4வது வர்ணமாகிய சூத்திரர்கள், மனு ஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன்?’ என்று பேசினார்.
ஆ.ராசா பேசும் இந்த வீடியோ இந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு அமைப்புகள் புகார் அளித்து வருகின்றன. மேலும் அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசுகையில்; ’மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால், அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை. நான் மன்னிப்பு கேட்கத் தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க. இந்திய அரசியல் சட்டப்படி உறுதிமொழி எடுத்த ஆளுநர் அவ்வாறு நடந்து கொண்டாரா?
நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்துக்கு எதிரானவர்கள்’ என பேசினார்.
இந்நிலையில், இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும், வரும் 26 ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“