Advertisment

சூத்திரர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் இழிவுபடுத்தியது ஏன்? ஆ. ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை!

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்?” என்று அனல் பறக்க எழுப்பிய கேள்வி சர்ச்சையாக வெடித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A Raja, A Rasa, DMK MP A Raja, DMK, manusmriti, periyar, anna, kalaignar

திமுக கொள்கைகளை முழங்குவதில் முன் வரிசையில் நிற்கும், திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்?” என்று அனல் பறக்க எழுப்பிய கேள்வி சர்ச்சையாக வெடித்துள்ளது.

Advertisment

திமுகவில் பல இரண்டாம் கட்டத் தலைவர்கள், மூன்றாம் கட்டத் தலைவர்கள், கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் என பலரும் கோயில்களுக்கு செல்வது, விழாக்களில் பங்கேற்பது வழக்கமாகிவிட்டது. திமுக மேடைகளில் ஒலிக்கும் பெரியார், அண்ணா கொள்கைகள் முழக்கங்களின் சற்று சுருதி குறைந்துவிட்டாலும், இன்னும் திமுகவில் பெரியார், அண்ணா கொள்கைகளை காரம் குறையாமல் பேசி வருபவர்தான் ஆ. ராசா. இவர் திமுகவின் அரசியல் மேடைப் பேச்சுகளில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் தனது பேச்சு வன்மையால் கொடிநாட்டத் தவறியதில்லை.

திமுகவில் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுபவர்களில் ஆ. ராசா முதலில் நிற்பார். ஆ. ராசாவின் தர்க்கப்பூர்வமான ஆதாரப்பூர்வமான பேச்சை ஆதாரப் பூர்வமாகவும் மறுக்க முடியாமல் எதிர் தரப்பு மௌனத்தையே பதிலளிப்பார்கள். அப்படியே பதில்கள் வெளிப்பட்டாலும் சலம்பல்களே மிஞ்சும். அதே நேரத்தில், ஆ. ராசாவின் சில பேச்சுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தவும் தவறியதில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆ. ராசா பிரச்சாரம் செய்தபோது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பிறப்பையும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு, ஆ.ராசா தனது பேச்சை வெட்டி ஒட்டி தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்று கூறினார். அதே நேரத்தில், புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர், மு.க. ஸ்டாலின் பங்கேற்ற மேடையில் பேசிய ஆ. ராசா, “பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்… உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன்… இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்… அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்… எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்… மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது.

இதையடுத்து, மாட்டிறைச்சி பற்றி பாஜகவின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிய ஆ. ராசா, “மாட்டுக்கறி சாப்பிடற எல்லா நாட்டு பிரதமரையும் அவர் கட்டிப்பிடிக்கிறார்… ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தைரியம் இருந்தால், மோகன் பகவத்துக்கு தைரியம் இருந்தால், மோடிக்கு தைரியம் இருந்தால், அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால், முஸ்லிம்களை தவிர்த்து மாட்டுக்கறி சாப்பிடுகின்ற யாரும் இந்துக்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விடுத்தார். பாஜகவினர் ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு கொந்தளித்தாலும், அதில் இருந்த தர்க்கத்தால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கடந்துசென்றார்கள்.

இந்த நிலையில், ஆ. ராசாவின் சமீபத்திய பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, பாஜகவினர் கொதிநிலைக்கு சென்றுள்ளனர். இந்த வீடியோவில் ஆ. ராசா பேசியிருப்பதாவது: “ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உறக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கிற என்பதை விடுதலையும் முரசொலியும் திராவிடர் முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4வது வர்ணமாகிய சூத்திரர்களை மனுஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆ. ராசாவின் இந்த பேச்சு பாஜகவினரையும் இந்துத்துவவாதிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஆ. ராசாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

பாஜகவினரும் இந்துத்துவ அமைப்புகளும் திமுகவை இந்துக்களின் எதிரி என்று விமர்சித்து வரும் நிலையில், சூத்திரர்கள் என இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆ. ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பாககவினரும் இந்துத்துவவாதிகளும் கடும் எதிர்ப்பையும் கண்டனமும் தெரிவித்து வரும் நிலையில், ஆ. ராசா உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார் என்று ஆதரவுகளும் பெரிய அளவில் காணப்படுகிறது.

“ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உறக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கிற என்பதை விடுதலையும் முரசொலியும் திராவிடர் முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Dmk A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment