”2ஜி பற்றி புரியாமல் என்னை கைது செய்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்தார்”, என முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2 ஜி வழக்கில் கடந்த 21-ஆம் தேதி நீதிபதி ஓ.பி.ஷைனி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விடுதலையான ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவரும் கடந்த 23-ஆம் தேதி சென்னை வந்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரிடமும் இருவரும் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தான் கடந்த முறை போட்டியிட்ட நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மக்களையும், கட்சியினரையும் ஆ.ராசா சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ஆ.ராசா, “பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்ததுபோல், மத்திய புலனாய்வு அமைப்புகளும், உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்குகளை கையாண்டன”, என தெரிவித்தார்.
மேலும், “ஆ.ராசாவை கைது செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைத்தார். அதன் பலனை அவரே அனுபவித்தார்.”, என கூறினார்.
திமுக தலைமை அனுமதித்தால் மீண்டும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் எனவும் ஆ.ராசா தெரிவித்தார்.