சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ. ராசாவால் திமுகவின் தலைவராக முடியுமா? என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுவையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஆ.ராசா பேசும்போது திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவி வகிக்கிறார் என்று பேசினார்.
இந்நிலையில் அவர் பேசியதற்கு தமிழிசை செளந்தரராஜன் இன்று பதிலளித்துள்ளார். “ நான் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டுக்கு சென்றேன்.
சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது. ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சாதி மட்டும்தான் சனாதனம் அல்ல. சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் திமுகவில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்? .
ஆ.ராசா திமுக தலைவராக முடியுமா? அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ ? முதலமைச்சராகவோ ஆக்கிவிட முடியுமா?. நீங்கள் ஒன்றுமே செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதைதான் காரணம். நீங்கள் எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்களால் கட்சியில் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன் பின்பு சனாதனம் பற்றி பேசுங்கள் “ என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“