/tamil-ie/media/media_files/uploads/2022/11/Kashi-Coimbatore-Train.jpg)
கோயம்புத்தூரில் இருந்து காசிக்கு ஞாயிற்றுக்கிழமை (இன்று) ரயில் புறப்பட்டது.
காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மிகம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்லும் 5ஆவது ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று (நவ.27) அதிகாலை 5 மணியளவில் கிளம்பியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
கடந்த 20ஆம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
இந்த வழியனுப்பு நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் வணங்காமுடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை தொடங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.