சென்னை கே.கே.நகரில் வீட்டை சுத்தம் செய்தபோது வீட்டில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்ததால் விஷம் பரவி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காடுகளிலும் மரம் செடிகொடிகள் நிறைந்த புதர் பகுதியிலும் காணப்படும் கொடிய நஞ்சு கொண்ட பாம்புகள் அவ்வப்போது நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களில் அதுவும் வீடுகளுக்குள் படுக்கை அறை, சமையலறை, கழிப்பறை ஆகிய இடங்களில் எப்படியோ பாம்பு புகுந்த நிகழ்வுகள் செய்தியாக வெளியானதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்போதெல்லாம், பெரிய அசம்பாவிதங்கங்கள் நடைபெற்றதில்லை. ஆனால், சென்னையில், வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் அடுத்த கன்னிகாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா (35). கடந்த 3 ஆம் தேதி சுமித்ரா வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்தபோது, வீட்டுக்குள் இருந்த ஷூவை எடுத்துவைத்துவிட்டு சுத்தம் செய்தார். அப்போது அவர் ஷூவுக்குள் இருந்த பாம்பை கவனிக்காததால் அந்த பாம்பு அவரை கடித்ததில் அதிர்ச்சி அடைந்து ‘பாம்பு பாம்பு’ என்று கூச்சலிட்டு வலியால் துடிதார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவருடைய கணவரும் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சுமித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் விஷம் தலைக்கு ஏறி அவருடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று மருத்துவகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுமித்ரா பாம்பு கடித்து உயிரிழந்தது தொடர்பாக சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படிஅக்கப்பட்டது.
கன்னிகாபுரம் பகுதியில் அடிக்கடி பாம்பு நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலையில், பாம்பு கடித்து சுமித்ரா உயிரிழந்ததால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.