நாகர்கோவில் நாகராஜா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நாகராஜா கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பக்தர்களோடு உணவு உட்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாவின் 54வது நினைவு தினத்தில் அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கும் அதிமுகவை பாஜக இரண்டு துண்டுகளாக பிரித்து வைத்திருக்கிறது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதேபோல் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியே பிரித்து வைத்து குளிர்காயலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர்.
மேலும், அண்ணாவின் பெயரை தாங்கியிருக்கிற ஒரு கட்சி இன்று வடநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியிடம் உதவி கேட்பது என்பது அவர்கள் இருவரின் இயலாமையை காட்டுகிறது. இது மிகவும் வேதனையான விஷயம்
அ தி மு க கடந்த காலங்களில் திராவிட இயக்க கொள்கைகளை முறையாக பின்பற்றவில்லை. இப்போது அந்த கட்சிக்கு முறையான தலைமையும் இல்லை, கொள்கையும் இல்லை.
அதிமுக இன்று எந்த இலக்கும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்து அழுத கதையாக பாஜக இன்று அதிமுக வை அழித்தால் தான் நாம் அந்த இடத்தை பிடிக்கலாம் என கனவு காண்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வைக்கப்பட்டால் உடைப்பேன் என்று சீமான் சொல்லியிருக்கிறார்.
சீமானுக்கு கொள்கையும் இல்லை, லட்சியமும் இல்லை.அவருக்கு எழுத்தைப் பற்றியும் தெரியாது. எழுத்து சமுகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை உருவாக்கி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
கலைஞரின் எழுத்தின் சாதனையை நினைவுப்படுத்தும் விதமாக பேனாவை ஒரு அடையாள வடிவமாக வைப்பதை எதிர்ப்பது சீமானின் அநாகரிகமான செயல்” என்றார்.
அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த பெண் ஒருவர் இடைமறித்து அமைச்சரிடம், “கருணாநிதியின் எழுத்துக்கள் ஈட்டி முனையாய் பார்த்ததாக கூறும் உங்களுக்கு கண்ணனின் கீதை உங்கள் இதயத்தை தொடுவதாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனோ தங்கராஜ், “திமுகவை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான். குமரி மாவட்டத்தில் கூட ரூ.50 கோடி செலவில் கோவில்களில் திருப்பணிகள் நடந்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/