திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் 21 வயது இளம் பெண் இனாம் என தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வையம்பட்டி அருகேயுள்ள பெரியஅணைக்கரைப்பட்டி உள்ளது. இங்குள்ள புனித தூயசெபஸ்தியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 21ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீராகளுக்கும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்க காசு, கட்டில், பிரோ, சைக்கிள், வெள்ளிக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தான் வளர்த்த காளையை போட்டிக்கு அழைத்துவருவதாகவும், அந்தக்காளையை தனி ஒரு வீரராக அடக்கும் மாடுபிடி வீரருக்கு காளையை கொண்டு வந்த இளம்பெண்ணும், காளையும் பரிசு என்று அறிவித்து நேற்று வையம்பட்டியில் நடந்த வாரச்சந்தையின்போது கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சாலையில் நின்று கொண்டு தண்டோரா போட்டு அறிவிப்பு செய்துள்ளார்.
இதனை அவ்வழியாகச் சென்றவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில் இது தவறான அறிவிப்பு எனவும், அவர் மதுபோதையில் இவ்வாறாக அறிவிப்பு செய்துள்ளதாகவும் கூறிய இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பும் விழாக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை எனவும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வையம்பட்டி காவல்துறையினர் இதுபோன்ற அறிவிப்பு குறித்து தங்களுக்கு தகவல் வரவில்லை எனவும் விழாக்குழுவினர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குவபர்களுக்கு இளம்பெண் பரிசா சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.