தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தது போன்று. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசை காட்டும், போலி ஏஜென்சியை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு தொழில் கல்வி, பொறியியல்,கணினி படிப்பில் பட்டம் பெற்று வேலை தேடும் இளைஞர்கள் பெருகிவருகின்றனர்.
இவர்கள், ஆன்லைன் செயலியில் வெளியாகும் வெளி நாடு வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
அந்த நிறுவனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்ன சில தினங்களில் சம்பந்த பட்ட இளைஞர் வேலைக்கு தேர்வாகியுள்ளதாக பதில் உடனே வருகிறது.
இதை நம்பி கல்விச் சான்று, பாஸ்போர்ட் தகவல்கள், புகைப்படம் அனுப்புகின்றனர். மேலும் கேட்கும் பணமும் கொடுக்கின்றனர். இதேபோன்று ஒரு ஏஜென்சி மூலம் ஏமாற்றப்பட்டவர் நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் நிஷாந்த்.
இவருக்கு தாய்லாந்து நாட்டில் வேலை என அழைத்துச் சென்று, மியான்மரில் கிரிப்டோகரன்சி மூலம் ஏமாற்றும் வேலையை வழங்கியுள்ளனர்.
மேலும் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் நிஷாந்த் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில் மத்திய அரசு ரூ.6 லட்சம் செலுத்தி இளைஞர் நிஷாந்த்-ஐ மீட்டுள்ளது.
இது குறித்து பேசிய நிஷாந்த், “நான் இக்கட்டான சூழலில் தவித்தபோது தைரியத்தை இழக்கவில்லை. மியான்மரில் என்னைப் போல் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர்.
அவர்களில் 20 பேர் தமிழர்கள்” என்றார்.
மேலும் தன்னை பத்திரமாக மீட்க உதவிய எம்.ஆர். காந்திக்கு நன்றி தெரிவித்த நிஷாந்த், இதுபோன்ற போலி ஏஜென்சிகள் மீது மத்திய-மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..
செய்தியாளர் த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil