தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் நோக்கம் குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதாகும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தமிழ்நாட்டில் நகர்ப்புரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்குக் குடிநீர். சுகாதாரம். மின்சாரம், கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்ற நகர்ப்புர வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயர் 1.9.2021 முதல் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீடற்ற மக்களுக்கு வீடு வழங்குவதோடு, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை. உறங்கும் அறை, சமையலறை. கழிவறை வசதிகளும். குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படுகிறது.
மேலும், அவர்களுக்கு என பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம். சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகளும் அருகிலேயே அமைக்க உத்தரவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ. 3,197.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
“பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மூலமாக பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளைச் செய்து கொடுக்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணைப் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“