எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு ஆதார் அட்டையும் அவசியம்!

ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம்

எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஆதார் அட்டையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் தமிழக ஒதுக்கீடுகளை பிற மாநிலத்தவர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது தமிழக மருத்துவ கலந்தாய்வில் கலந்துக்கொண்ட பிற மாநில மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. கூடவே, மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலத்திலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா? என்ற அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரனிடம், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது கடினம் என்பதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.

இதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close