விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், “ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவர் என்று அறியப்பட்ட ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் அதவ் அர்ஜுனா அரசியலில் பிரபலமானார்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து தி.மு.க தலைமையிலான கூட்டணியில் வி.சி.க அங்கம் வகித்துவரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சனம் செய்து வந்தார்.
அண்மையில், எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். ஆதவ் அர்ஜுனா இந்த பேச்சு தி.மு.க-வினரிடையே அதிருப்தியை கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. வி.சி.க தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் வலியுறுத்தி வந்தனர். கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் ஆதவ் அர்ஜுனா மீது கட்சியின் உயர் மட்டக்குழுவில் கலந்தாய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை அறிவித்தார். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திரட்டப்பட்ட ரூ. 10 லட்சத்திற்கான வெள்ள நிவாரண நிதியை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா நீக்கம் குறித்து விளக்கமளித்தார். "ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக கட்சியின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அவரிடம் இது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும், அறிவுறுத்தல்களை மீறி ஆதவ் அர்ஜுனா செயல்பட்டார். அதனால் தான் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து, அவரை 6 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்திருக்கிறோம்.
விஜய்யுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த விதமான மோதலும் இல்லை. எங்கள் நலனை கருத்திற்கொண்டு தான் விஜய் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்தோம்.
நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் அறிவுறுத்தினேன். அம்பேத்கர் அல்லது நூல் உருவாக்கத்தின் பின்னணி குறித்து பேசுங்கள் எனக் கூறினேன். அதை மீறி அவர் பேசியது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவிற்கு அது அமைந்து விட்டது.
அதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் உள்ளதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. முதலில், பா.ஜ.க மோடி கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லை அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என அவர் பதிலளிக்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், “ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 9, 2024
'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு… pic.twitter.com/bxmcTsrDup
ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பக்கத்தில் பதிவிடிருப்பதாவது: “'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.