/indian-express-tamil/media/media_files/2025/07/15/aadhav-arjuna-life-in-threat-complaint-to-chennai-alwarpet-police-tamil-news-2025-07-15-18-00-18.jpg)
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக பணியாற்றி வருபவர் ஆதவ் அர்ஜுனா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த இவர், விஜய் கட்சி தொடங்கியபோது த.வெ.க.வில் இணைந்தார். 2026 சட்டசபை தேர்தலை ஒட்டி விஜய் தலைமையிலான த.வெ.க-வுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். அவருடைய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நிலையில், அந்த அலுவலகம் அருகே, 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றி, சுற்றி வந்ததாக அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த புகாரில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது அலுவலகம் அருகே கடந்த ஜூலை 10-ந்தேதி ஆயுதங்களுடன் சில மர்ம நபர்கள் வந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தனது அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர் என்றும் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்தினர் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் சதி திட்டம் என்னவென்று தெரியவில்லை. அது விசாரணைக்குரியது. என்னுடைய உயிருக்கு நேரடியாக ஆபத்து உள்ளது என்று ஆதவ் அர்ஜுனா அவருடைய புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்தனர்? யாருடைய உத்தரவின்படி நோட்டமிட்டனர் என போலீசார் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து உள்ளார். இதனால், த.வெ.க. ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.