தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, வி.சி.க தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “விஜய்க்கும் , விசிக தலைவர் திருமாவளவனுக்கும் ஒரே கொள்கைதான்” என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.
வி.சி.க முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு த.வெ.க-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா த.வெ.க-வில் இணைந்த சில மணி நேரங்களிலேயே யாரும் எதிர்பாராத வகையில், சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். த.வெ.க-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கூறுகையில், “எங்கு கள அரசியலை கற்றுக் கொண்டேனோ அங்கு வந்து என் ஆசான் திருமாவளவனிடம் ஒரு தனயனாக வாழ்த்து பெற்றேன். பெரியார் மற்றும் அம்பேத்கருடைய கொள்கைகளை திருமாவளவனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். இந்த பயணத்தில் எந்த முடிவு எடுத்தாலும் என் ஆசானிடம் கலந்துரையாடி என் பயணத்தை தொடங்குவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த சந்திப்பு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “கொள்கைரீதியாக என்னுடைய பணி மக்களுக்கானதாக எப்போதும் இருக்கும். அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில் கொள்கைப்படி அரசியலை உருவாக்குங்கள் என்பதுதான் திருமாவளவன் எனக்கு கொடுத்த அறிவுரை. எங்களுக்கும் திருமாவளவனுக்கும் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. நாங்கள் எதிரெதிர் துருவம் அல்ல. த.வெ.க தலைவர் விஜய்க்கும் சரி, வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கும் சரி, ஒரே கொள்கைதான்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக த.வெ.க இருக்கிறது. வி.சி.க பேசும் அதே கொள்கைகளை த.வெ.க-வும் பேசுகிறது.” என்று கூறினார்.
வி.சி.க துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், விஜய் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்சியில் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதனால், தி.மு.க - வி.சி.க கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, ஆதவ் அர்ஜுனா வி.சி.க-விலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக வி.சிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
ஆனால், ஆதவ் அர்ஜுனா விரைவிலேயே, வி.சி.க-விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். தொடர்ந்து தி.மு.க-வை விமர்சித்து வந்த ஆதவ் அர்ஜுனா, இரு தினங்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.