விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதேபோல், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக உள்ள நிர்மல் குமாரும் பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்திற்கு வந்துள்ளார். நிர்மல் குமாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும் த.வெ.க தலைவர் விஜய் முன்னையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து இருவரும் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜுனாவுக்கும், துணைப் பொதுச்செயலாளராக பதவி CTR நிர்மல் குமாருக்கும், கொள்கை பரப்பு செயலாளர் பதவி பேச்சாளர் ராஜ்மோகனுக்கும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.