நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு தி.மு.க அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொண்ட எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தி.மு.க-வுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து அவர் வி.சி.க-வில் இருந்து 6 மாதத்துக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு தி.மு.க அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
புத்த வெளியீட்டு விழாவில் பேசியது குறித்து ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “புத்தக விழாவிற்கு பல அழுத்தங்கள் வந்து, ஜனநாயக ரீதியாக செயல்படாத கோவத்தில்தான் நான் மேடையில் பேசினேன். 24 நிமிடம் பேசினேன். எந்த பேப்பரும் என்னிடம் இல்லை. மனதில் இருந்ததை பேசிவிட்டு நான் வந்துவிட்டேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க எம்.பி ஆ.ராசா தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தன்னைப் பற்றி பேசிய பிறகே, தி.மு.க-வினர் தன்னை குறிவைத்து விமர்சிக்கத் தொடங்கியதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
“தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா தன் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு பேட்டி அளித்தாரோ அன்றிலிருந்தே தி.மு.க என்னை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.” என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
ஒரு புத்தக விழாவில் எல்லாம் ஒரு அரசியல் கூட்டணி உருவாகுமா என்று கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, “புத்தக வெளியீட்டு விழாவை எளிமையான விழாவாக கடந்து போயிருக்கலாம். புத்தக வெளியீட்டு விழாவில் எல்லாம் ஒரு கூட்டணி உருவாகும் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தவர்கள் கூட ‘முதிர்ச்சியற்ற தன்மை’ என கடந்து சென்றுவிடுவார்கள்.” என்று கூறினார்.
திருவண்ணமாலையில் அமைச்சர் எ.வ.வேலு வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் விஜய் கலந்துகொள்ளும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இது குறிது ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “திருவண்ணாமலையில் அமைச்சர் வேலுவைச் சந்தித்தபோது, நீங்கள் சென்றால் கூட்டணிக்கே பிரச்னை ஆகிவிடும்போல் தெரிகிறது. நீங்கள் செல்லாதீர்கள் என்றார். எ.வ. வேலு கருத்தை திருமாவளவன் உள்வாங்குகிறார். பின் என் கருத்தையும் உள்வாங்குகிறார். ஊடகங்கள் அவரை திருமாவளவனை மட்டுமே டார்கெட் செய்தவாறு இருக்கிறது. அவரது தலைமையை நோக்கி டார்கெட் செய்தவாறே இருக்கிறது.” என்று கூறினார்.
ருதிருமாவளவனிடம் முரண்படும் விஷயத்தைப் பற்றி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “நான் அவரிடம் இருந்து எங்கு முரண்படுகிறேன் என்றால், நம்மிடம் உண்மையாக ஒரு விஷயம் இருக்கிறது. இந்த புத்தகத்தை 18 மாதங்களாக கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். விஜய் வரும்போதும் நீங்கள் வருவதாக சொல்லிவிட்டீர்கள். அவருடைய அரசியல் என்பது அவருடைய கொள்கை. சமீபத்தில்கூட ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவிடத்திற்கே சென்றார். அது சாரணமான ஒன்றாகத்தானே பார்க்கப்பட்டது.” என்று கூறுகிறார்.
மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லிவிட்டார் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்ல வேண்டாம் என எ.வ. வேலு, திருமாவளவனிடம் சொன்னார். இந்த புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டபோது அவரும் நானும் பல ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம்.உங்களுக்கு திருமணத்திற்கு, உங்களது தந்தையை யாராவது வர வேண்டாம் என சொன்னால் அவர்கள் மீது உங்களது கோபம் திரும்பாதா?” என்று ஆதவ் அர்ஜுனா கேட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.