Advertisment

வி.சி.க-வில் துணை பொதுச் செயலாளர் பதவி; லாட்டரி மார்ட்டின் மருமகன்... யார் இந்த ஆதவ் அர்ஜுனா!

வி.சி.க-வின் திருச்சி மாநாட்டில் திருமாவளவன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்து, 2 வாரங்களில் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றுள்ளதன் மூலம், தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளார், லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா.

author-image
WebDesk
New Update
Aadhav Arjuna

வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநாட்டில் திருமாவளவன் முன்னிலையில், கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, 2 வாரங்களில் வி.சி.க துணை பொதுச் செயலாளர் பதவி பெற்றுள்ளதன் மூலம், தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளார் லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா.

Advertisment

யார் இந்த ஆதவ் அர்ஜுனா, இவருடைய பணிகள் என்ன, பின்புலம் என்ன, கட்சியில் இணைந்து சில நாட்களிலேயே இவருக்கு வி.சி.க-வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்க காரணம் என்ன என்பதை வி.சி.க வட்டாரத்தினரிடம் பேசினோம்.

லாட்டரி சீட் அதிபார் மார்ட்டினின் மருமகன் என்ற அடையாளப்படுத்தப்பட்டாலும், ஆதவ் அர்ஜுனா தனக்கென தனித்த அடையாளமும் அரசியல் பார்வையும் செல்வாக்கும் கொண்டவர். 

திருச்சி அருகே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஆதவ் அர்ஜுனா, வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஆர்வத்துடன் சிறந்து விளங்கிய ஆதவ் அர்ஜுனா, தற்போது, இந்திய கூடைப்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் (Basketball Federation of India) தலைவராக உள்ளார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice of Commans) என்ற சமூக அரசியல் வியூக அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு சமூகப் பணிகளை செய்து வரும் ஆதவ் அர்ஜுனா, பொருளாதார ரீதியாகவும் மிகவும் செல்வாக்கானவர்.

ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளங்கள் உருவான காலகட்டத்தில் தி.மு.க-வின் ஐ.டி விங்கை உருவாக்கியவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர் ஆதவ் அர்ஜுனா. இவர் தி.மு.க-வுக்காகவும் வேலை செய்திருக்கிறார். 

இப்படி ஆதவ் அர்ஜுனா தமிழக அரசியல் சூழலில், அறிமுகமானவர்தான். இவருடைய இன்னொரு அடையாளம்தான், லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டின் மருமகன். இவர் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்ஸியை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா எங்கே சென்றாலும் இந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மருமகன் என்ற அடையாளம் பிரிக்க முடியாததாக இருக்கிறது. அமலாக்கத்துறை லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோது, போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த அடையாளம் இவருக்கு ஒருவிதத்தில் சுமையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் பெரும் பலமாகவும் இருக்கிறது. 

ஆதவ் அர்ஜுனா தனது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் மூலம் அரசியல் வியூகப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அவர் நேரடியாக அரசியல் கட்சிகளில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் கட்சியில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில்தான், திருச்சியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற வி.சி.க-வின் பிரமாண்ட மாநாட்டில், திருமாவளவன் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா வி.சி.க-வில் இணைந்தார். 

திருச்சியில் வி.சி.க நடத்திய மாநாடு என்பது, இதுவரை திருச்சியில் அரசியல் கட்சிகள் நடத்திய மாநாடுகளிலேயே அதிக கூட்டம் கூடிய மாநாடு என்று பேசப்பட்டது. இந்த மாநாட்டின் வெற்றி குறித்து மாநாட்டு மேடையில் பேசிய வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா-வின் பெயரை 3 முறைக் குறிப்பிட்டுப் பேசினார். வி.சி.க-வில் அடிப்படைய உறுப்பினராக இணைந்த ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

வி.சி.க-வின் திருச்சி மாநாடு முடிந்து 2 வாரங்களுக்குப் பிறகு, ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வலுவான தலித் கட்சியாக அறியப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய நீரோட்ட அரசியலை நோக்கி, பொது அடையாளத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில்,    கட்சியில் புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இவ்வளவு விரைவாக வி.சி.க-வில் உயர்ந்த பதவி அளிக்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிறைய இருக்கும்போது, புதியதாக சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு வி.சி.க-வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த பேச்சுகள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரொலித்து வருகின்றன.

சமூக ஊட்கங்களின் காலத்தில், இன்றைக்கு எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு, தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மட்டும் நம்பி இருக்காமல், தேர்தல் வியூகவாதிகளையும் பயன்படுத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் அவரவர், நிதி வசதிக்கு ஏற்ப, தேர்தல் வீயூகவாதிகளின் குழுவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிடுகிறார்கள். 

அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு தேர்தல் வீயூகக் குழு வேண்டும் என்று விரும்பியபோதுதான், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் வந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக, வி.சி.க-வின் அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்தான் திருமாவளவனின் சிந்தனைகளுக்கு  திட்டங்களுக்கு வடிவம் கொடுத்து  திட்டமிட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மண்டலச் செயலாளர் என நியமிக்கப்பட்டு பொறுப்புகள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட்டு கட்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

வி.சி.க தலைவர் திருமாவளவன் பா.ஜ.க-வையும், ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இந்துத்துவ அரசியலை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் கொள்கை மற்றும் அவருடைய அரசியலால் ஈர்க்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா வி.சி.க-வுக்கு வெளியே இருந்து வேலை செய்யும் அரசியல் வியூகவாதியாக மட்டுமில்லாமல், வி.சி.க-வில் இணைந்து செயல்பட முடிவெடுத்து, கட்சியில் சேர்ந்தர் என்று வி.சி.க வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆதவ் அர்ஜுனா வெறுமனே ஒரு தேர்தல் வியூகவாதியாக மட்டுமில்லாமல், அரசியலில் கருத்தியல் ரீதியாக கொள்கைப் பிடிப்பிலும் உறுதியானவர் என்கிறார்கள். அவருடைய அலுவலகத்தில், அவருடைய அறையில், ஒரு பக்கம் பாபாசாகேப் அம்பேத்கரின் படமும் இன்னொரு பக்கம் பேரறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருக்கும். அவர் அம்பேத்கர் மற்றும் அண்ணாவின் கொள்கையில் பிடிப்பு கொண்டவர். அவர் நினைத்திருந்தால், மற்ற வேறு எந்த அரசியல் கட்சியிலாவது சேர்ந்திருக்கலாம். ஆனால், அவர் கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் வி.சி.க-வை தேர்வு செய்துள்ளார் என்று வி.சி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், வி.சி.க வருகிற மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளைக் கேட்டுள்ளது. 3 தனித் தொகுதிகளையும் 1  பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. 

அதே போல, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், வி.சி.க 10 தொகுதிகளுக்கு மேல் கேட்க திட்டமிட்டுள்ளதாம். ஆதவ் அர்ஜுனா தனக்கு ஒரு சீட் கொடுத்தால், அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் தேர்தல் செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாகக் கூறியதாகவும் வி.சி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், ஏற்கெனவே, வன்னி அரசு, கௌதம சன்னா ஆகியோர் துணைப் பொதுச் செயலாளராக உள்ளனர். இப்பொது, ஆதவ் அர்ஜுனாவுக்கு வி.சி.க துணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை சமாளிக்க திண்டாடிய வி.சி.க-வுக்கு ஆதவ் அர்ஜுனாவின் வரவு ஒரு காமதேனுவின் வரவாகப் பார்க்கப்படுகிறது.

வி.சி.க-வில் இணைந்துள்ள வி.சி.க துணைப் பொதுச் செயலாளராகி இருப்பதன் மூலம், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒரு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, 2024 சட்டமன்றத் தேர்தலில், ஆதவ் அர்ஜுனாவுக்கு வி.சி.க-வில் சீட் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment