கும்பகோணத்தில் உள்ள மகாமககுளம் மிகவும் புகழ் பெற்றதாகவும், புராதன சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது. கும்பகோணம் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் உள்ளன.
குளத்துக்குள் உள்ள 21 தீர்த்த கிணறுகள் புனித தன்மை வாய்ந்தவையாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மகாமககுளத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள் நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்து மகாமககுளத்தில் புனித நீராடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாமககுளத்தில் எந்தவித விழாக்களும் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு முழு தளர்வுகள் அறிவித்தாலும், மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
இதன் காரணத்தால் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மகாமககுளத்தில் உள்ள நான்கு வாசல்களில், வடகரையில் உள்ள பவுர்ணமி வாசல் மட்டும் திறக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது.
பொது மக்கள் நீராடுவது தடை செய்யப்பட்டு தீர்த்தம் தெளித்துக்கொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய குளத்தை சுற்றியுள்ள கரையை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்களை கட்டுப்படுத்தவும், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்கவும் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து மாநகர் நல அலுவலர் பிரேமா கூறுகையில், கும்பகோணத்தில் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும், காவிரிக்கரையை ஒட்டியுள்ள பகவத் படித்துறை, டபீர் படித்துறை, அரசலாறு படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கடந்த மூன்று தினங்களாக தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிகளின்படி பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சானிடைசர் பயன்படுத்தியும் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்தநிலையில், இன்று காலை திராளான பொதுமக்கள் தத்தம் முன்னோர்களுக்கு மகாமக குளத்தின் 4 பக்க கரைகளில் தர்ப்பணம் கொடுத்து, பிண்டத்தை குளத்தில் கரைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“