ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று(3.8.18) சேலம், தருமபுரி, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் கழனிகளில் விதைகளைத் தூவி புதிய பயிரிடும் இந்த காலத்திற்கு தனி விசேஷங்கள் உண்டு .
ஆடிப்பெருக்கு தினத்தில் பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விடுவார்கள். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலிக் கயிறு அணிவார்கள்.தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
சேலத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
திருச்சி காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர், அகண்ட காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால், திருச்சி மாவட்ட மக்கள் ஆடிப்பெருக்கை உவகையுடன் கொண்டாட மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
ஆடிப்பெருக்கு விழாவை திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுளது.