/indian-express-tamil/media/media_files/2025/10/16/screenshot-2025-10-16-093953-2025-10-16-09-40-14.jpg)
சர்வதேச விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்காக இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India - AAI) சார்பில் சிறப்பு நூலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, டாக்டர் கலாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து இந்நூலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், பாதுகாப்பு சோதனைக்குப் பிந்தைய சிக்யூரிட்டி ஹோல்ட் ஏரியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை விமான நிலைய இயக்குநர் எம். ராஜா கிஷோர் திறந்து வைத்தார். நீண்ட நேரம் இடைநிறுத்தம் (layover) காரணமாக காத்திருக்கும் பயணிகள் இந்நூலகத்தை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
டாக்டர் கலாம் ஃபவுண்டேஷன் நிறுவனர் கிஷோர் சந்திரன் இதுகுறித்து கூறியதாவது:
“புவனேஸ்வர் விமான நிலையத்தில் இதேபோன்ற முயற்சியை பார்த்தபின், இதை சென்னையிலும் அமைக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. அங்குள்ள நூலகம் புத்தகங்களை கடனாக வழங்கும் முறையில் செயல்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு இது இலவசமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் முடிவு செய்தோம். இதற்கான யோசனையை மின்னஞ்சல் மூலம் சென்னை விமான நிலைய நிர்வாகத்திடம் பகிர்ந்தவுடன் அவர்கள் உடனடியாக ஒப்புதல் அளித்தனர்,” என்றார்.
பயணிகளின் வசதிக்காக நூலகம் அமைக்கப்படும் இடமாக டிரான்சிட் ஏரியா தேர்வு செய்யப்பட்டது. தற்போது இங்கு வணிகம், ஆன்மிகம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதனுடன் குழந்தைகளுக்கான சிறப்பு தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
கிஷோர் சந்திரன் மேலும் கூறுகையில், “இம்முயற்சியை மற்ற விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதற்காக பல விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
இந்த புதிய முயற்சி, நீண்ட நேர இடைநிறுத்தங்களில் பயணிகள் பயனுள்ள நேரத்தை கழிக்க உதவுவதுடன், வாசிப்பை ஊக்குவிக்கும் சிறந்த முன்னெடுப்பாகவும் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.