ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆண்டாள் குறித்து, ராஜபாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து உரை நிகழ்த்தினார். அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியது சர்ச்சை ஆகியிருக்கிறது.
வைரமுத்துவுக்கு இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்துவை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் வேறு பல இடங்களிலும் புகார்களை அளிக்க இந்து அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.
கொளத்தூரில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
‘ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூற வில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டும், மேற் கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இறுதியாக, கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே இந்த விவகாரத்தில் வைரமுத்து மீது மாவட்ட நீதிமன்றங்களோ, போலீஸோ நடவடிக்கை எடுக்க தற்போது வாய்ப்பில்லை.