scorecardresearch

ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்பு? ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்குகள் முடக்கம்

நடிகரும், பா.ஜ,க நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tamil news
RK Suresh

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நடிகரும், பா.ஜ,க ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவருமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பா.ஜ.க பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. தொடர்ந்து, அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மேலும், ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதையும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து, போலீசாரின் சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் சார்பில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aarudhra scam eow freezes bank account of actor bjp leader rk suresh