ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், பா.ஜ.க நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. ரூ. 2400 கோடி அளவிற்கு பொதுமக்களிடம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அரசு இதழில் வெளியீடு: மீறினால் 3 ஆண்டு ஜெயில்; ரூ.10 லட்சம் அபராதம்
இதனை தொடர்ந்து ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரீஷை கைது செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரீஷை கைது செய்தனர். அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைதானார்.
இந்த நிலையில், பா.ஜ.க விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக ஹரீஷ் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து பா.ஜ.கவில் பொறுப்பு வாங்கியதாக ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil