மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆணையம் , அப்பலோ மருத்துவமனையிடம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் சிகிச்சை விவரம்:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த தொடர் சந்தேகங்களுக்கு பிறகு, இதுக் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது.இந்த ஆணையம் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அப்பலோ மருத்துவமனை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில், எம்ஜிஆர் சிகிச்சை குறித்த ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு, ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆவணங்களை வரும் அக்டோபர் 23-க்குள் அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி எம்.ஜி.ஆர் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்பு, மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுக்குறித்த கேள்வியை ஆணையம் தொடக்கியுள்ளது. அதாவது, எம்.ஜி.ஆரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அழைத்து செல்வதற்கான முடிவை யார் எடுத்தது? என்று கேள்விகளை எழுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆரை மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்றது போல, ஜெயலலிதாவை அழைத்து செல்ல முடியாதபடி எங்கு சிக்கல் ஏற்பட்டது என ஒப்பிட ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.